கடையம் அருகே, நீரோடையில் மூழ்கி என்ஜினீயர் சாவு


கடையம் அருகே, நீரோடையில் மூழ்கி என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 6 April 2020 4:00 AM IST (Updated: 5 April 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே நீரோடையில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

கடையம், 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கானாவூர் வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுவனத்தில் விடுமுறை விடப்பட்டதால் ஊருக்கு வந்துள்ள விஜயகுமார் தனது மனைவி வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு தனது தந்தையை பார்ப்பதற்காக கானாவூர் வந்து இரவு அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் அவரும், அவரது அண்ணன் சந்தோஷ் குமாரும் ராமநதி அணைக்கு தண்ணீர் வரும் நீரோடையில் குளிக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து விஜயகுமாரை திடீரென காணவில்லை.

இதையடுத்து சந்தோஷ் குமார் தனது தம்பியை அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். இதில் பாறை வழுக்கி விழுந்து விஜயகுமார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆகிறது. இவருக்கு எஸ்தர் சீலா என்ற மனைவியும், 3 வயதில் ஜான் பெனியல் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story