சத்தி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை


சத்தி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை
x
தினத்தந்தி 5 April 2020 9:45 PM GMT (Updated: 5 April 2020 8:59 PM GMT)

சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்துக்கொன்று வேட்டையாடியது.

சத்தியமங்கலம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பெரியகுளத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50). விவசாயி. இவருடைய வீடு வனப்பகுதியையொட்டி உள்ளது. தோட்டத்தில் மல்பெரி செடி வைத்து வளர்த்து வருகிறார். மேலும் தோட்டத்தில் 4 ஆடுகளையும் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் குப்புசாமி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு ஆடு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அதன் அருகே சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கடித்து கொன்றது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தார்கள். அப்போது இளைஞர்கள் சிலர், சிறுத்தையின் கால்தடம் பதிவான இடத்தில் ஒரு கம்பை நட்டு அதில் செல்போனை கட்டி வைத்தனர். பின்னர் செல்போனில் கேமராவை இயக்கிவிட்டு, குதறப்பட்ட ஆட்டின் உடலை அங்கு கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து குப்புசாமியும் மற்றும் சிலரும் நேற்று காலை அங்கு சென்று பார்த்தார்கள். அங்கு கிடந்த ஆட்டின் உடலை காணவில்லை. உடனே செல்போனை பார்த்தார்கள். அதில் நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை மீண்டும் வந்து ஆட்டின் உடலை கவ்வி வனப்பகுதிக்கு கொண்டு சென்ற காட்சி பதிவாகியிருந்தது. சிறுத்தையின் கால்தடத்தை பார்த்து தொடர்ந்து சென்றபோது, சிறிது தூரத்தில் ஆட்டின் எஞ்சிய உடல் கிடந்தது.

இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வன ஊழியர்கள் அங்கு சென்று இறந்த ஆட்டின் உடலை பார்வையிட்டனர். மேலும் பதிவாகியிருந்த கால்தடங்களையும் ஆய்வு செய்தார்கள். இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் உடனே கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதன்பேரில் அந்த இடத்தில் வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story