காரைக்குடி மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்-ஆட்டு இறைச்சி பறிமுதல்
காரைக்குடி பகுதியில் உள்ள இறைச்சி கடை மற்றும் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன் மற்றும் ஆட்டு இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி,
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகரில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் காரைக்குடி நகராட்சி மீன் மார்க்கெட்டில் காலையில் மீன் வாங்கிச் சென்றவர்கள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து வாங்கிய கடையிலேயே மீன்கள் கெட்டுவிட்டது என்று கூறி அதனை திருப்பிக் கொடுத்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேல்முருகன், தியாகராஜன், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ரவி சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் உள்ளிட்டோர் விரைந்து சென்று காரைக்குடி மீன் மார்க்கெட் மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலையோர மீன், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி விற்பனை கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல கடைகளில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன சுமார் 150 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஆட்டு இறைச்சி கடைகளில் கெட்டுப்போன ஆட்டிறைச்சியும் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. சுமார் 100 கிலோ அளவில் ஆட்டு இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன் மற்றும் ஆட்டு இறைச்சியின் மொத்த மதிப்பு ரூ.1½ லட்சம் வரை இருக்கும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் நகராட்சி ஆணையாளர் மாலதி, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் முன்னிலையில் புதைத்து அழிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த வியாபாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story