மாவட்டத்தின் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு நடந்த இறைச்சி வியாபாரம்


மாவட்டத்தின் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு நடந்த இறைச்சி வியாபாரம்
x
தினத்தந்தி 5 April 2020 11:00 PM GMT (Updated: 5 April 2020 10:36 PM GMT)

மாவட்டத்தின் பல இடங்களிலும் சமூக இடைவெளியை பொருட்படுத்தாது இறைச்சி வியாபாரம் நடந்தது.

திருத்தங்கல், 

ஊரடங்கு அமலில் இருந்தாலும் நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இறைச்சி கடைகளில் கூட்டம் திரண்டது. பல பகுதிகளில் கூட்டத்தை தவிர்க்க ஊருக்கு வெளியே கடை அமைக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இறைச்சி வாங்க வந்தோர் முக கவசம் அணிந்து இருந்தாலும் இடைவெளி விடாமல் நின்று வாங்கிச்சென்றதை காண முடிந்தது.

சாத்தூர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இறைச்சிகடை சிவகாசி சாலைக்கு மாற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி வாங்க பொதுமக்கள் காலையில் இருந்தே அதிக அளவில் குவிந்தனர். இறைச்சி கடைகளில் பொதுமக்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படவில்லை. மேலும் இறைச்சி விலை அதிகமாக இருந்தது.

திருத்தங்கல்

திருத்தங்கலில் ஆட்டிறைச்சி கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.750-க்கு விற்கப்பட்டது. கோழி இறைச்சி கொரோனா பீதிக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. பின்னர் விற்பனை சரிந்த நிலையில் ரூ.50-க்கு விற்கப்பட்டது. நேற்று விலை உயர்ந்து ரூ.190-க்கு விற்பனை ஆனது. இதேபோன்று பன்றி இறைச்சியின் விலையும் ரூ.180-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்தது. மேலும் திருத்தங்கல் பகுதியில் மீன் விலையும் கடுமையாக உயர்ந்தது. கட்லா வகை மீன் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்த நிலையில் அதன் விலை கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தி விற்கப்பட்டது.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் இறைச்சி கடை இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அங்கும் கூட்டம் அலைமோதியது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.700-க்கு விற்றனர். கோழி இறைச்சி விலையும் ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆக உயர்ந்தது. வழக்கமாக திருமங்கலம், எட்டயபுரம், தோணுகால், வீரசோழன் ஆகிய பகுதிகளில் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் கூடும். அங்கிருந்துதான் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி வருவார்கள். ஆனால் தற்போது சந்தைகள் மூடப்பட்டு இருப்பதால் ஆடுகள் கிடைப்பதில்லை எனவும் உள்ளூர் பகுதியில் தேடிப்பிடித்து ஆடுகளை வாங்கி வர வேண்டியிருப்பதால் விலை உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தளவாய்புரம்

தளவாய்புரம், சேத்தூர் சுற்று வட்டாரபகுதிகளில் ஆட்டிறைச்சி கடந்த மாதம் கிலோ ரூ.600 ஆக இருந்தது. தற்போது ரூ.800 ஆக உயர்ந்துள்ளது. வாரந்தோறும் ராஜபாளையத்தில் ஆட்டு சந்தை நடைபெறும். தற்போது ஊரடங்கு உத்தரவால் அது தடைபட்டுள்ளது. இதனால் இறைச்சி விலை உயர்ந்துள்ளது. இதேபோல் முட்டை கடந்த மாதம் 350 காசு என விற்பனை செய்யப்பட்டது. கொரோனா பீதியில் ரூ.2ஆக குறைந்தது. தற்போது நாமக்கல்லில் இருந்து முட்டை வரத்து தடைபட்டுள்ளது. இதனால் ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் ஆட்டிறைச்சியின் விலை ரூ.700-ல் இருந்து ரூ.900 ஆக உயர்ந்தது. கோழி இறைச்சி ரூ.140-க்கு விற்பனையானது.

Next Story