கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
இது தொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 140 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு மடிவாளாவை சேர்ந்த 68 வயது முதியவர் துபாய்க்கு சென்றுவிட்டு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி பெங்களூரு திரும்பினார். அதே போல் 62 வயதாகும் அவரது மனைவியும் அவருடன் துபாய்க்கு சென்றுவிட்டு வந்தார்.
அவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள ஆகாஸ் மருத்துவமனையில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். தற்போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
பெலகாவியை சேர்ந்த 36 வயது பெண், 40 வயது ஆண், 67 வயது பெண், 41 வயது பெண், பல்லாரியை சேர்ந்த 41 வயது ஆண் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெலகாவி, பல்லாரியை சேர்ந்த 5 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் பெலகாவி மற்றும் பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் இதுவரை 16 மாவட்டங்களில் வைரஸ் பரவியுள்ளது. இதில் பெங்களூருவில் 56 பேர், மைசூருவில் 28 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், உத்தர கன்னடாவில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 7 பேர், கலபுரகியில் 4 பேர், பல்லாரியில் 6 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வார், குடகு, பெங்களூரு புறநகரில் தலா ஒருவர், பீதரில் 10 பேர், பெலகாவியில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா அறிகுறியுடன் நேற்று 56 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் அதிகளவில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், 9745697456 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா கண்காணிப்பு செல்போன் செயலியை அரசின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதில் கொரோனா நோயாளிகள், எந்தெந்த பகுதிகளுக்கு சென்று வந்தனர் என்பது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story