நாகையில், மதுபாட்டில்களை இடமாற்றம் செய்ய கடைகளை திறந்த போது திரண்ட மது பிரியர்கள் - போலீசார் விரட்டி அடித்தனர்


நாகையில், மதுபாட்டில்களை இடமாற்றம் செய்ய கடைகளை திறந்த போது திரண்ட மது பிரியர்கள் - போலீசார் விரட்டி அடித்தனர்
x
தினத்தந்தி 5 April 2020 10:15 PM GMT (Updated: 6 April 2020 3:15 AM GMT)

நாகையில் மதுபாட்டில்களை இடமாற்றம் செய்ய கடைகளை திறந்த போது திரண்ட மது பிரியர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் கிடைப்பதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மூடப்பட்ட மதுக்கடைகளிலேயே மதுபாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் மதுக்கடைகளுக்குள் இருந்த மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிலவுகிறது. இதை உணர்ந்த டாஸ்மாக் அதிகாரிகள் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை பாதுகாப்பாக குடோன்களில் வைக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொள்ளையை தடுப்பதற்காக நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை குடோனுக்கு இடமாற்ற திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று நாகை-செல்லூர் சாலையில் உள்ள மதுக்கடை, அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுக்கடை, கூக்ஸ் சாலையில் உள்ள மதுக்கடை ஆகிய 3 மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை லாரிகள் மூலமாக குடோனுக்கு எடுத்து செல்லும் பணி நடந்தது. இதையொட்டி மதுக்கடைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நாகை-செல்லூர் சாலையில் உள்ள மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை லாரியில் ஏற்றுவதற்காக அதிகாரிகள் மதுக்கடையை திறந்தனர். இதை அறிந்த மதுபிரியர்கள் மது வாங்குவதற்காக கடை முன்பு திரண்டனர். இதையடுத்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் லத்தியை காட்டி மது பிரியர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள் பலத்த பாதுகாப்புடன் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story