கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலி
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் நேற்று திடீரென இறந்தார்.
கோவை,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே சென்றதால் அவர் நேற்று முன்தினம் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை கொரோனா வார்டில் டாக்டர்கள் சேர்த் தனர்.
மேலும் அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை திடீரென அவர் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட கோவை மதுக்கரையை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் இறந்தார்.
இந்த நிலையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஆண் ஒருவர் திடீரென இறந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் பாதிப்பு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் இருந்தது. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவரின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் இறந்துவிட்டார். கடைசி கட்டத்தில் இங்கு வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story