தேனி மாவட்டத்தில் இறைச்சி கடைகள் மூடப்பட்டதால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் இருந்து டெல்லியில் நடந்த மத வழிபாட்டு மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 22 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இதனால் மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரசின் ஆபத்தை உணராமல் காய்கறி சந்தை, மளிகை கடைகள், மருந்து கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக கூடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் கூட்டம் கடைகளில் அதிக அளவு இருந்தது. இதனால் வீடு தேடி சென்று காய்கறி, மளிகை பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து, செயல்படுத்தி வருகிறது.
தேனி மாவட்டத்தில் குறிப்பாக போடி, கம்பம், தேனி, உத்தமபாளையம், பெரியகுளம், சின்னமனூர் ஆகிய இடங்கள் கொரோனா பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலான வீடுகளில் மக்கள் இறைச்சி வகைகளை சாப்பிட ஆர்வம் கொள்வர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை உணராமல் மக்கள் இறைச்சி கடைகளில் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் மீன், கோழி, ஆடு என அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள், இறைச்சி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story