கொரோனா தடுப்பு நடவடிக்கை: நெல்லை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது - போலீசார் தீவிர கண்காணிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கை: நெல்லை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது - போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 10:45 PM GMT (Updated: 6 April 2020 7:12 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 வாரங்களை கடந்து விட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

மேலும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர் தங்களது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி கடைகளுக்கு மட்டுமே சென்று வரவேண்டும்.

இதுதவிர பிற்பகல் 1 மணிக்கு பிறகு மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்கள் இயக்க கூடாது. அவசர தேவையின்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக நெல்லை மாநகரில் மட்டும் 23 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பை தொடங்கினர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் தலைமையில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மாலை மற்றும் இரவு நேரத்தில் தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஊரடங்கு உத்தரவு காலம் முடிந்த பிறகே அந்த வாகனங்கள் அபராத தொகை வசூலிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நேற்று மதியம் 1 மணிக்கு மளிகை கடைகள், காய்கறி கடைகளின் கடை முன்பு கயிறுகள் கட்டப்பட்டன. அதன் பிறகு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு பொருட்கள் இல்லை என்று மறுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் நெல்லையில் நேற்று மாலை மற்றும் இரவில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

நெல்லை புறநகர் மாவட்டத்தில் போலீசார் தடை உத்தரவை மீறி செயல்படுவோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் காரணம் இல்லாமல் வெளியே சுற்றிய 1,004 பேர் மீது 713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து 461 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

அத்தியாவசிய பணிக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற வேண்டும். அவ்வாறு அனுமதி சீட்டு இல்லாமல் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story