வடநெம்மேலி ஊராட்சியில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
வடநெம்மேலி ஊராட்சியில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான குடும்பத்தினர் பலர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வடநெம்மேலி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் லயன் எஸ்.குமார் தன்னுடைய சொந்த செலவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டைகள் என ஆயிரம் குடும்பத்திற்கு அரிசி மூட்டைகள் வழங்கினார்.
திருப்போரூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கே.சாந்திகுமார் தலைமையில், வடநெம்மேலி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் லயன் எஸ்.குமார் முன்னிலையில் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல் ஆகியோர் வடநெம்மேலி ஊராட்சி மக்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினர்.
இதில் காஞ்சீபுரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் பி.ஏ.எஸ்வந்தராவ், காஞ்சீபுரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜி.ராகவன், அ.தி.மு.க. பிரமுகர்கள் கே.ராஜி, கே.அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story