டெல்லியில் இருந்து வந்த இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
டெல்லியில் இருந்து வந்த இந்தோனேசியாவை சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்,
இந்தோனேசியா நாட்டில் இருந்து 4 குடும்பங்களை சேர்ந்த சைலானி(வயது 42), சித்தி ரோகனா(45), ரமலான் பின் இப்ராகிம்(47), அமன்ஜகாரியா(50), முகமது நசீர் இப்ராகிம்(50), கமரியா(55), மரியோனா(42), சுமிசினி(43) ஆகிய 8 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி விமானம் மூலம் டெல்லி வந்துள்ளனர். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
இங்கும் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இந்தோனேசியா நாட்டை சேர்ந்த இந்த 8 பேரும் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து விசா விதிமுறைகளை மீறி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் ராமநாதபுரத்தில் ஒரு இடத்தில் குழுவாக தங்கியிருந்து, 144 தடை உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தார்களாம்.
இவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் மூமின்அலி, ராமநாதபுரம் பாரதிநகர் அசரப்அலி, முகமது காசிம் ஆகியோர் உதவியாக இருந்ததாகவும் கூறி பட்டணம்காத்தான் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேற்கண்ட புகார் தொடர்பாக இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் மீது பாஸ்போர்ட் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story