கூடலூரில் , வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்


கூடலூரில் , வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 6 April 2020 10:15 PM GMT (Updated: 7 April 2020 5:21 AM GMT)

கூடலூரில் வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர்,

கூடலூரில் கடந்த சில மாதங்களாக காலில் காயத்துடன் காட்டுயானை சுற்றித்திரிகிறது. சமீபத்தில் கோக்கால் மலையடிவாரத்தில் முகாமிட்டு இருந்த அந்த காட்டுயானைக்கு, பலாக்காய்களில் மருந்து மற்றும் மாத்திரைகளை வைத்து, கொடுத்து வனத்துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் கோக்கால் மலையடிவாரத்தில் இருந்து தோட்டமூலா பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு அந்த காட்டுயானை சென்றது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை, பாக்கு மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அதில் குறிப்பாக அறுவடை செய்ய தயாராக இருந்த வாழைத்தார்கள் சேதம் அடைந்தன.

இரவு முழுவதும் அந்த பகுதியில் முகாமிட்ட காட்டுயானை, விடியற்காலையில் அங்கிருந்து சென்றது. காலையில் வாழைகளை காட்டுயானை சேதப்படுத்தி இருப்பதை கண்ட விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள், காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் விளைபொருட்கள் சேதம் அடைந்து, வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். அதற்கு உரிய இழப்பீடு தொகையும் தருவது இல்லை என்று கூறி வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

Next Story