டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு


டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 7 April 2020 5:21 AM GMT (Updated: 7 April 2020 5:21 AM GMT)

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

சீர்காழி,

டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஊர் திரும்பியுள்ளனர். இதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியலை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என தமிழக சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்த நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் தாமாக முன்வந்து சுகாதாரத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள், உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இவர்களில் நாகையில் 2 பேருக்கும், நாகூரில் 2 பேருக்கும், பொரவச்சேரியில் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீர்காழி 6-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. இதனை தொடர்ந்து அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்ய அவர்கள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் வசித்த பகுதியை சுற்றி உள்ள 5 வார்டுகளை ‘சீல்’ வைத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை நடந்த இந்த பணியில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, தாசில்தார் சாந்தி, நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராஜ்மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

நேற்று காலை எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ‘சீல்’ வைக்கப்பட்ட வார்டுகள் தொடர்ந்து 28 நாட்களுக்கு போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து நேற்று அந்த பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 800 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதியானதால் நேற்று காலை சீர்காழி நகர் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் நடமாடவில்லை. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது. சீர்காழி பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பீதியில் உள்ளனர்.

இதேபோல் திருமருகல் ஒன்றிய பகுதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனையடுத்து நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்கள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களின் சுற்றுவட்டார பகுதிகளான திட்டச்சேரி, புறாக்கிராமம் ஆகிய பகுதிகளை ‘சீல்’ வைத்தனர்.

திட்டச்சேரியில் உள்ள 2 ஆயிரத்து 850 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கும், புறாக்கிராமத்தில் உள்ள 550 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.

கூடுதல் கலெக்டர் பிரசாந்த், ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் திருமருகல் ஒன்றியத்திற்கு மருத்துவ குழுவை அனுப்பி வைத்துள்ளனர்.

வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்வதற்காக மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், டெங்கு களப்பணி ஊழியர்கள் கொண்ட குழுவினர் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி கூத்தூர் பிலால் நகரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூத்தூர் கிராமம் மற்றும் திருக்களாச்சேரி ஊராட்சி தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் செந்தில்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் உள்ளிட்ட 40 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் திருக்களாச்சேரி ஊராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தோற்று ஆய்வு மேற்கொண்டும், வீடுகளில் உள்ள நபர்களை கணக்கெடுத்தும் வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத்ரபீக் ஆகியோர் இந்த பணிகளை பார்வையிட்டனர்.

நாகை முதலாவது கடற்கரைத்தெருவில் உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் வசித்த பகுதிக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சென்று அந்த பகுதி முழுவதையும் ஆய்வு செய்தனர். அந்த பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்’ வைத்தனர். ‘சீல்’ வைத்த பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

அந்த பகுதியின் உள்ளே யாரும் செல்லவும் கூடாது, அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வேறு பகுதிக்கு சென்றார்களா? என்றும், அவர்களது உறவினர்களுக்கு ஏதும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Next Story