ஊரடங்கால் மூடப்பட்ட மார்க்கெட்: செடியிலேயே கருகும் கேந்தி பூக்கள் - விவசாயிகள் கண்ணீர்
களக்காடு அருகே ஊரடங்கால் மார்க்கெட் மூடப்பட்டதால் செடியிலேயே கேந்தி பூக்கள் காய்ந்து கருகுவதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.
களக்காடு,
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் விவசாயிகள் பலர் கேந்தி பூக்கள் பயிரிட்டு உள்ளனர். இந்த கேந்தி செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, பூக்களை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் மார்க்கெட்டும் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. இதனால் செடிகளிலேயே பூக்கள் காய்ந்து கருகும் அவலம் நிலவுகிறது. இதை பார்த்து விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கிறார்கள்.
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்த விவசாயி தெய்வேந்திரன் தனது வயலில் 1½ ஏக்கர் பரப்பளவில் கேந்தி பூக்கள் பயிரிட்டு இருக்கிறார். அங்கு பூக்கள் பூத்துக்குலுங்கிய போதிலும் அவற்றை அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறார்.
இதுகுறித்து தெய்வேந்திரன் கூறியதாவது:-
எனது வயலில் பூக்கும் பூக்களை ஆட்கள் மூலம் பறித்து அவற்றை குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தேன். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க தோவாளை பூ மார்க்கெட்டும் மூடப்பட்டு உள்ளது.
இதனால் பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பூக்கள் செடியிலேயே காய்ந்து கருகி வருகின்றன. பூக்களை அறுவடை செய்ய முடியாததால், செடிகளை நட்டு வளர்க்க ஆன செலவு முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை ஈடுசெய்யும் வகையில் அரசு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.
Related Tags :
Next Story