24 மணி நேரமும் கண்காணிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பேரூராட்சி பணியாளர்கள் தீவிரம்


24 மணி நேரமும் கண்காணிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பேரூராட்சி பணியாளர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2020 4:15 AM IST (Updated: 8 April 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 24 மணி நேரமும் பேரூராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கடையநல்லூர், 

தென்காசி அருகே உள்ள மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நன்னகரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் பதுருநிஷா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் நன்னகரம், இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா தலைமையில் நேர்முக உதவியாளர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் பாலகணேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மேலகரம் பேரூராட்சி நகரம் பகுதியில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்தனர். பொதுமக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். அனைவரும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். யாருக்காவது தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

தென்காசி, குற்றாலம் மற்றும் மேலகரம் பகுதிகளில் இருந்து நன்னகரம் இந்திரா நகருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திரா நகரில் இருந்து மக்கள் வெளியே செல்லவும், வெளியே இருந்து யாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நெல்லை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் குற்றாலிங்கம் கூறியதாவது:-

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் 55 பேரூராட்சிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு உத்தரவின்படி மாவட்ட ஆட்சி தலைவர்களின் அறிவுரையின்படி அனைத்து பேரூராட்சி பணியாளர்களும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் பேரூராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், சுத்தமான குடிநீர் வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பதுடன் ஆங்காங்கே உணவு வழங்கும் பணியும் மக்கள் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஒழிப்பு பணியில் பேரூராட்சி நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story