முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
முத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
முத்தூர்,
கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.இதன்படி திருப்பூர் மாவட்டம் முத்தூர் கொடுமுடி சாலையில் சாலியங்காட்டுப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட எல்லையை இணைக்கும் இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனை சாவடியில் வெள்ளகோவில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியே வரும் அத்தியாவசிய பால், காய்கறி வாகனங்கள் உட்பட அனைத்து கனரக, இருசக்கர வாகனங்களையும் தடுத்து நிறுத்தி பலத்த சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் போலீசார் இந்த சோதனை சாவடியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோட்டார் சைக்கிளில் மறைத்து ஒரு கேனில் சாராயம் கடத்தி வந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் முத்தூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம், வீரமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த ஓட்டக்காது செந்தில் (வயது 48) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கேனில் கொண்டு வரப்பட்ட 10 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story