படப்பை அருகே, வீடு, வீடாக முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணி - மாவட்ட கலெக்டர் ஆய்வு


படப்பை அருகே, வீடு, வீடாக முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணி - மாவட்ட கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 April 2020 4:15 AM IST (Updated: 8 April 2020 2:56 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே முதியோர்களுக்கு வீடு, வீடாக சென்று ஓய்வூதியம் வழங்கும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 210 முதியோர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்திடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் அவர் களுக்குரிய முதியோர் ஓய்வூதிய தொகையை வருவாய்த்துறை மற்றும் கிராமங்களில் உள்ள வங்கி உதவியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குன்றத்தூர் வட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி கிராமத்தில் ஓய்வூதியம் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டு வருவதையும், மேலும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.500 கூடுதலாக வழங்கப்பட்டு வருவதையும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் மாலதி, மாவட்ட கலெக்டர் அலுவலக தனி வட்டாட்சியர் ஜெயகாந்தன், குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

நிவாரண பொருட்கள்

மேலும் தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து சமூக பங்களிப்பு நிதியினை மாவட்ட நிர்வாகம் சார்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்கள் மற்றும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பீட்டில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியுடன் கூடிய மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களின் தொகுப்புகளையும் அப்போது மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Next Story