ஆதரவற்றோருக்கு கருணை கரம் நீட்டும் மதுரை மாநகராட்சி; விதவிதமான உணவுகளை 3 வேளையும் தயாரித்து வழங்குகிறது


ஆதரவற்றோருக்கு கருணை கரம் நீட்டும் மதுரை மாநகராட்சி; விதவிதமான உணவுகளை 3 வேளையும் தயாரித்து வழங்குகிறது
x
தினத்தந்தி 8 April 2020 4:15 AM IST (Updated: 8 April 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சி சார்பில் ஆதரவற்றோருக்கு 3 வேளையும் விதவிதமான உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகிறது.

மதுரை, 

கொரோனா நோய் பரவுதலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் வீடில்லாத ஆதரவற்றவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு பணம் அல்லது உணவு கிடைக்கும். தற்போது ஆள்நடமாட்டம் இல்லை என்பதால் அவர்களின் உணவு கேள்விக்குறியாகி இருந்தது.

இவர்களின் உணவு பிரச்சினையை தீர்க்க மதுரை மாநகராட்சி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதாவது ஆதரவற்றவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளது. அதன்படி பூங்கா முருகன் கோவிலில் சஷ்டி மண்டபத்தில் 150 பேரும், காக்கைபாடினியார் மாநகராட்சி பள்ளியில் 100 பேரும், பழங்காநத்தம் சமுதாய கூடத்தில் 80 பேரும், ஹார்விபட்டி சமுதாய கூடத்தில் 50 பேரும் என மொத்தம் 380 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும், இன்னும் சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்களுக்காக சஷ்டி மண்டபத்தில் 750 பேருக்கும், சுப்பிரமணியபுரம் சமுதாய கூடத்தில் 80 பேருக்கும் சமையல் செய்யப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் காலை உணவாக 5 இட்லி, சட்னி, சாம்பார் தரப்படுகிறது. மதியம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதம் வழங்கப்படுகிறது.

அதாவது முட்டை பிரியாணி, தேங்காய் சாதம், தக்காளி சாதம், காளான் பிரியாணி, புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவை தயார் செய்து வழங்கப்படுகிறது. சஷ்டி மண்டபத்தில் மட்டும் முட்டை பிரியாணி செய்வதில்லை. இரவு நேரத்தில் இட்லி, பொங்கல், கிச்சடி, உப்புமா போன்றவை தயார் செய்து வழங்கப்படுகிறது.

உணவு தயாரிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து மாநகராட்சி வகுத்துள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடித்து சமையல் செய்கின்றனர். இந்த உணவுகளை மாநகராட்சி வருவாய் துறையினர் வாகனத்தில் எடுத்து சென்று ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு கருணைக்கரம் நீட்டும் மதுரை மாநகராட்சியை மக்களும் பாராட்டுகிறார்கள்.

Next Story