எஸ்.பி.பட்டினம் பகுதியில் கொரோனா அறிகுறி தீவிர கண்காணிப்பு


எஸ்.பி.பட்டினம் பகுதியில் கொரோனா அறிகுறி தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 April 2020 9:45 PM GMT (Updated: 7 April 2020 9:44 PM GMT)

எஸ்.பி.பட்டினம் பகுதியில் கொரோனா அறிகுறி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த 2 பேர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் சொந்த ஊரான எஸ்.பி.பட்டினத்திற்கு திரும்பிய நிலையில் அரசு உத்தரவின் அடிப்படையில் இருவரும் சுகாதாரத்துறையினர் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து எஸ்.பி.பட்டினத்தை மையமாக வைத்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களான சோழகன் பேட்டை, பாசிபட்டினம், தீர்த்தாண்டதானம் உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா அறிகுறி குறித்த பரிசோதனை பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ், செவிலியர் பத்மா மற்றும் சுகாதார குழுவினர் தினமும் 50 வீடுகளில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் அறிகுறிகள் ஏதும் உள்ளதா? என்பதையும், அந்த வீடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் கேட்டறிந்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் யாருக்கேனும் உடல்நலக்குறைவு கண்டறியப்பட்டால் அவர்களை அந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் அரசு டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் ஏற்பாட்டில் கிருமி நாசினி மருந்து தெளித்தல், தூய்மை பணிகள் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story