கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது - சிவசேனா கருத்து


கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது - சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 8 April 2020 5:00 AM IST (Updated: 8 April 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை, 

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டா்கள் உள்ளிட்டவர்களை பாராட்டும் வகையில், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி வீட்டு வாசல், பால்கனிக்கு வந்து கைதட்டி சத்தம் எழுப்புமாறு பிரதமர் மோடி பொதுமக்களை கேட்டு கொண்டு இருந்தார்.

இதேபோல கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டு இருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் அவ்வாறு செய்தனர்.

இது குறித்து சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

கைதட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றால் நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது. மாறாக அந்த போரில் வீழ்ந்துவிடுவோம். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு மக்கள் அதரவு அளித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுமக்கள் பிரதமரின் கோரிக்கையை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். அல்லது பிரதமர் பொதுமக்களிடம் சரியாக கூறாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர் இதுபோன்ற ஒரு சூழலை விரும்பி இருக்கலாம்.

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெளிவாக பொது மக்களிடம் சுய ஒழுக்கத்தை வலியுறுத்தி வருகிறார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இவர் போன்ற தளபதி தான் நமக்கு தேவை. தவறான திட்டமிடல், வதந்திகளால் நாம் பானிபட் போரில் தோற்றோம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர் அது போல முடிந்துவிடக்கூடாது. மராட்டிய தளபதி சதாசிவ்ராவ் பாவின் நிலை மாநில மக்களுக்கு வந்துவிடக்கூடாது.

பொதுமக்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை பிரதமர் மோடி தெளிவாக கூறியிருக்க வேண்டும். அரசின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மா்காஸ்(டெல்லி மாநாடு) மட்டும் விதிகளை மீறவில்லை கொரோனாவை பரப்பியதாக மர்காசை குறை கூறுபவர்கள் சுய ஒழுக்கத்தையும், சமூக இடைவெளியையும் பின்பற்றினார்களா?.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த 5-ந் தேதி சோலாப்பூரில் பலர் ஒன்றாக கூடி தெருவில் பட்டாசு வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டதையும், வார்தாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. 200 பேரை திரட்டி பிறந்தநாள் கொண்டாடியதையும் சிவசேனா சாம்னாவில் சுட்டிக்காட்டி உள்ளது.

Next Story