கர்நாடகத்தில் எந்தவித திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது - மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கர்நாடகத்தில் எந்தவித திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது - மாநில அரசுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 8 April 2020 5:30 AM IST (Updated: 8 April 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எந்தவித திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று கர்நாடக மாநில அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் அருகே தர்மராயசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கரக திருவிழா நடைபெறும். இந்த திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தப்படக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெங்களூருவில் கரக திருவிழா நடத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் கரக திருவிழாவை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்திருப்பதாக செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதுபற்றி அறிந்த கர்நாடக ஐகோர்ட்டு இப்பிரச்சினை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சி.எஸ்.ஓகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘கரக திருவிழாவை நடத்த அரசு சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் கரக திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’’ என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.எஸ். ஓகா பின்னர் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் கரக திருவிழாவை நடத்த வேண்டிய தேவையில்லை. மேலும் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என எந்தவித மதத்தைச் சார்ந்த திருவிழாக்களையும், பொது நிகழ்ச்சிகளையும் நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

இந்த உத்தரவை பின்பற்றுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

மேலும் இந்த தீர்ப்பின் நகலும் கர்நாடக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பின்படி கரக திருவிழா நடைபெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் இன்று(புதன்கிழமை) தர்மராயசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது. இதில் அர்ச்சகர்கள் உள்பட வெகுசிலர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் இந்த சிறப்பு பூஜையில் பொதுமக்கள் யாரும் வந்து கலந்து கொள்ள வேண்டாம் என்று பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷ்னர் சேத்தன் சிங் ரத்தோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story