தவறான முறையில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக பிரசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக தவறான முறையில் பிரசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஒரு சில விஷமிகள், சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். சில ஊர்களில் அந்த சமுதாயத்தினரை வெளியேற்றவும், சமூக ரீதியாக புறக்கணிக்கவும் வேண்டி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ள கருத்துகளை நான் பாராட்டுகிறேன்.
அவரது கருத்து வெறும் பேச்சில் மட்டும் இருக்கக்கூடாது. அது கிராம பஞ்சாயத்து வரை போய் சேர வேண்டும்.
சட்ட நடவடிக்கை
முதல்-மந்திரி மற்றும் பா.ஜனதா கட்சியின் பெயரை பயன்படுத்தியே இத்தகைய தவறான பிரசாரம் செய்கிறார்கள். அதனால் மாநில அரசு சைபர் கிரைம் போலீசாரை பயன்படுத்தி தவறான பிரசாரம் செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அல்லது வீடியோ மூலம் தவறான பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையை விடுக்க வேண்டும்.
மோசமான நிலை இல்லை
வருகிற 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
மாநில அரசு எக்காரணம் கொண்டும், அரசின் அனைத்து துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கக்கூடாது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத மோசமான நிலை இல்லை. வேலைக்கு வர வேண்டாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வது சரியான நடவடிக்கை அல்ல.
சம்பளத்தை குறைக்கக்கூடாது
அரசு ஊழியர்கள் வீடுகளிலேயே இருந்தாலும், அவர்களுக்கு வீட்டு வாடகை, கடன் தவணை செலுத்துவது, கடனுக்கான வட்டியை செலுத்துவது போன்ற பல்வேறு செலவுகள் உள்ளன. வேண்டுமானால், அரசு சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நிறுத்தி வைக்கட்டும்.
அந்த நிதியை சம்பளம், கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். தற்போதைக்கு மக்கள் நிம்மதியாக மூச்சுவிட்டு வாழ்க்கையை நடத்துவது முக்கியம். அதனால் எக்காரணம் கொண்டும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கக்கூடாது.
மத்திய அரசு விருது
கர்நாடகத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தூங்கிவிட்டது போல் தெரிகிறது. இந்த துறையின் மந்திரி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. கோடைகாலம் தொடங்கிவிட்டது. வறட்சி உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கிராமங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியது அவசியம்.
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூ.275 ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கவும், ஒரு கிராம பஞ்சாயத்துக்கு ரூ.5 கோடி வரை செலவு செய்யவும் வாய்ப்பு உள்ளது. எனது கனகபுரா தொகுதியில் இந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட நிதியை அதிகமாக பயன்படுத்தியதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசு விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.
கூட்டுறவு அமைப்புகள்
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்காவிட்டால், வரும் நாட்களில் அவர்கள் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டுவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமை. கர்நாடகத்தில் பால் கூட்டமைப்புகள் உள்பட பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் பலமாக உள்ளன.
இந்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து பழங்கள், காய்கறிகள், தக்காளி போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு பாஸ்
இது லாபம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. பாக்கு விவசாயிகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று உலக சுகாதார தினம்.
டாக்டர்கள் நமது உடல் ஆரோக்கியத்தை காப்பாற்ற பகல்-இரவாக உழைத்து வருகிறார்கள். இந்த நேரத்தில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டுகிறேன். சில தனியார் மருத்துவ மையங்கள் மூடப்பட்டுள்ளன. டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்பினாலும், அவர்கள் வீடுகளிலேயே சிக்கியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கி, அவர்களின் சேவையை ஆற்ற அனுமதிக்க வேண்டும்.
பொருளாதார சிக்கல்
அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நோயாளிகளை பார்ப்பது இல்லை என்று புகார் எழுந்துள்ளது. எந்த நோயாளியும் சிகிச்சை கிடைக்காமல் சாகக்கூடாது என்பது எங்களின் விருப்பம். முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் ஒரு செயல்படையை உருவாக்கியுள்ளோம். மக்கள் மற்றும் மருத்துவ துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து ஒரு அறிக்கையை தயாரித்து மாநில அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு நாம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் 30 சதவீத வேலை வாய்ப்புகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வழிகாட்டுதல்கள்
நாம் நமது தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மாநில அரசு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்க முன்னாள் தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம். அந்த குழு வழிகாட்டுதல்களை உருவாக்கி அறிக்கையை வழங்கும். அந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைப்போம்.
மந்திரிகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதை ஆளுங்கட்சி சரிசெய்து கொள்ளும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story