பெரம்பலூரில், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்கள் கைவரிசை
பெரம்பலூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கடந்த 25-ந்தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன்படி பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உப்பு ஓடை அருகே உள்ள டாஸ்மாக் கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த கடை உப்பு ஓடையில் இருந்து சற்று தொலைவில் வயல்வெளிகளுக்கு அருகில் ஒதுக்குப்புறமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், சீல் வைக்கப்பட்டிருந்த அந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட மதுபான பெட்டிகளை எடுத்துள்ளனர். அதில் ஒரு பெட்டியை திறந்து, பீர்பாட்டில்களை எடுத்த மர்ம நபர்கள், அங்கேயே உட்கார்ந்து பீர் குடித்துள்ளனர். பின்னர் காலியான பாட்டில்களையும், அட்டை பெட்டிகளையும் அங்கேயே வைத்துவிட்டு மீதமுள்ள மதுபான பெட்டிகளை திருடிச்சென்றுள்ளனர்.
நேற்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள், டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், வெளியே பிரிக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் மற்றும் குடித்துவிட்டு வைக்கப்பட்டிருந்த பீர்பாட்டில்களையும் பார்த்து, மதுபானக்கடையின் மேற்பார்வையாளர் துரைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து துரைசாமி, பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அந்த நாய் டாஸ்மாக் கடையில் மோப்பம் பிடித்தபடி ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.மேலும் அந்த கடைக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல்ரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர்.
டாஸ்மாக் கடையில் இருந்து திருடிச்செல்லப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மர்மநபர்கள் கார் அல்லது இலகுரக வாகனத்தில் வந்து திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story