தீயில் எரிந்து தகர கொட்டகை சாம்பல்: சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
தகர கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நொய்யல்,
நொய்யல் அருகே உள்ள கவுண்டன்புதூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 52). தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை சுதாரித்து கொண்ட தங்கராசு உள்பட குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதற்கிடையே வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து அருகே உள்ள தென்னை மரத்தின் மீது விழுந்தது. தொடர்ந்து அந்த தென்னை மரமும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகர கொட்டகையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் தென்னை மரத்தில் பற்றிய தீயையும் அணைத்தனர்.
இந்த விபத்தில் மொபட், 2 சைக்கிள்கள், உணவு பொருட்கள், துணிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. அதுமட்டுமின்றி 2 ஆடுகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீசார் நேரில் வந்து, தீ விபத்துக்கான காரணம் என்ன? குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேற்று நேரில் சென்று, பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், அரசின் சார்பில் இலவச வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்எண்ணெய் உள்ளிட்டவைகளை வழங்கியதோடு, தனது சொந்த செலவில் ரூ.10,000-ம் நிவாரண உதவியாக வழங்கினார். அப்போது புகளூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story