பாணாவரம் பகுதியில் புதிய கொள்முதல் நிலையத்தை திறக்காததால் - 5 ஆயிரம் நெல் மூட்டைகள் பாழாகும் அபாயம்
பாணாவரம் பகுதியில் புதிய நெல்கொள்முதல் நிலையத்தை திறக்காததால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் பகுதியில் நெல்சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை நியாயமான விலைக்கு விற்க அரசின் நெல்கொள்முதல் நிலையத்தை நாடுகின்றனர்.
தற்போது வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டதால் பாணாவரத்தில் புதிதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தின் தலைமை கொள்முதல் நிலையத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டது. அதனை தொடர்ந்து பாணாவரத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைய உள்ள இடத்தில் சுத்திகரிப்பு எந்திரத்தை இறக்கி கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
அங்கு தங்கள் வயலில் விளைந்த நெல்லை விற்பதற்காக பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிாமங்களான போளிப்பாக்கம், பழையபாளையம், புதூர், கீழ்வீராணம், மங்களம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அங்கு கொண்டு வந்தனர்.
ஆனால் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை அரசு இதுவரை திறக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் விவசாய பணிகள், கொள்முதல் ஆகியவற்றுக்கு எந்த தடையும் இல்லை என அரசு அறிவித்து விட்டது. அதனால் தங்கள் நெல்மூட்டைகள் விற்று விடும் என கருதினர். ஆனால் பல வாரங்களாக திறக்கப்படாததால் இங்கு கொண்டு வரப்பட்டு அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் பூச்சி அரித்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்கள் அந்த நெல் வெயிலில் காய்வதால் எடை இழப்பும் ஏற்படும். நகைகளை அடகு வைத்தும் பல்வேறு இடங்களில் கடன் பெற்றும் நெல் சாகுபடி செய்தனர். அறுவடை செய்து நல்ல மகசூல் கிடைத்த நிலையில் கொள்முதல் நிலையத்தில் உடனே விற்கப்பட்டு பணம் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். ஆனால் நெல் மூட்டைகள் பாழாகி வருவதாலும் எடை குறைவாகி வருவதாலும் சரியான விலைக்கு போகுமா? என்பது கேள்வியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் உணவுப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளிடம் அவற்றை கொள்முதல் செய்து அரிசி ஆலைக்கு அனுப்ப வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story