கொரோனா தொற்றை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை கருவி ஓரிரு நாட்களில் வரவழைக்கப்படும் - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி


கொரோனா தொற்றை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை கருவி ஓரிரு நாட்களில் வரவழைக்கப்படும் - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 7 April 2020 10:30 PM GMT (Updated: 8 April 2020 4:49 AM GMT)

கொரோனா தொற்றை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை கருவி ஓரிரு நாட்களில் வரவழைக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

அடுக்கம்பாறை,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 39 நபர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி டீன் செல்வி ஆகியோருடன் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தாலைபேசி வாயிலாக நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன. மேலும் கொரோனா தொற்றினை விரைவாக கண்டறிய ரத்த பரிசோதனை செய் வதற்கான கருவிகள் ஓரிரு நாட்களில் வரவழைக்கப்படும்.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு தடை என்பது நிரந்தரமல்ல, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் வாங்கி செல்லலாம். வேலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,771 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,405 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தேவையில்லாமல் வெளியில் வந்து செல்வதை தவிர்த்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும், நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story