நாகர்கோவிலில் அதிரடி நடவடிக்கை தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் மீன்கள் பறிமுதல் - குப்பைக்கிடங்கில் கொட்டி அழிப்பு


நாகர்கோவிலில் அதிரடி நடவடிக்கை தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் மீன்கள் பறிமுதல் - குப்பைக்கிடங்கில் கொட்டி அழிப்பு
x
தினத்தந்தி 8 April 2020 8:50 AM GMT (Updated: 8 April 2020 8:50 AM GMT)

நாகர்கோவிலில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 1 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மீன்கள் குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.

நாகர்கோவில்,

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகை, காய்கறி, பால் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்கள், மருந்துக்கடைகள் போன்றவை நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் காய்கறி சந்தைகள் வடசேரி பஸ் நிலையம், மாநகராட்சி பொருட்காட்சி மைதானம் போன்ற பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மீன் சந்தைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரமற்ற முறையில் தனிநபர்கள் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி பகுதியில் மீன் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையில் வடசேரி அசம்புரோடு பகுதியில் மாநகராட்சி நகர்நல மையம் அருகில் ஒரு மீன்கடை செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது தடையை மீறி மீன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. வெளியிலும், குளிர்பதன பெட்டிகளிலும் சுமார் 1 டன் எடையுள்ள மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த மீன்கள் சுகாதாரமற்ற நிலையிலும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த மீன்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மாநகராட்சி குப்பை வண்டியில் ஏற்றினர். பின்னர் அவற்றை மாநகராட்சி குப்பைக்கிடங்குக்கு கொண்டு சென்று மருந்து தெளித்து அழித்தனர். மாநகராட்சி கடையான அந்த கடையை அதிகாரிகள் பூட்டி, சாவியை எடுத்து சென்றனர்.

இதேபோல் பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலையில் 3 கடைகளில் மீன் வியாபாரம் செய்யப்படுவதாகவும், அவை அழுகிய மீன்களாக இருப்பதாகவும் ராஜாக்கமங்கலம் வட்டார உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் (பொறுப்பு) சங்கரநாராயணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரும், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் ஆகியோர் வடசேரி போலீசாருடன் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு கடையில் அழுகிய மீன்கள் இருந்தது. மற்ற 2 கடைகளில் நல்ல மீன்கள் இருந்தன. அழுகிய மீன்கள் 24 கிலோ இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இன்று(புதன்கிழமை) முதல் யாரும் மீன் விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் மீன் வியாபாரிகளை அறிவுறுத்தினர்.

Next Story