ஆடுகளுக்கு மரக்கிளையை முறித்தபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி


ஆடுகளுக்கு மரக்கிளையை முறித்தபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 8 April 2020 8:50 AM GMT (Updated: 8 April 2020 8:50 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே, ஆடுகளுக்கு மரக்கிளையை முறித்தபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் மருதநாயகம். அவருடைய மகள் கவிதா (வயது 19). இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து பி.காம். சி.ஏ. படித்து வந்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் கவிதா, சொந்த ஊரான கதிர்நரசிங்கபுரத்துக்கு வந்தார். இந்தநிலையில் அவர், ஆடுகளுக்கு இரை தேட ஊரின் அருகே உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகில் உள்ள ஆலமரத்தில் கிளைகளை ஒடித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். 150 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் படுகாயம் அடைந்த கவிதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். பின்னர் கவிதாவின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ராஜதானி போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story