பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரக்கூடாது - அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்
பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வரக்கூடாது என அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் வசிப்பிட பகுதிகளை சுற்றி உள்ள வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வராமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்க எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டிபட்டி பகுதியில் தங்கி உள்ள 250-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளடக்கிய உணவு பொருட்கள் தொகுப்பினை அமைச்சர்கள் வழங்கினர்.
தொடர்ந்து ராசிபுரம் அணைக்கும் கரங்கள் மனநல காப்பகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் உணவு பொருட்களை அமைச்சர்கள் நேரில் சென்று வழங்கினார்கள்.
இதேபோல் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ராசிபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-
மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சமைப்பவர்கள், உணவு கொண்டு செல்பவர்கள் உள்பட அனைவரும் உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அரசு அறிவித்துள்ளபடி வீட்டை விட்டு எக்காரணம் கொண்டும் தேவையின்றி வெளியே வரக்கூடாது. வெளியிடங்களுக்கு தேவை காரணமாக சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்.
எனவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். நகராட்சி அலுவலர்கள் காய்கறிகளை வாகனங்கள் மூலமாக அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி விற்கும் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து காய்கறி விற்பனை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதுடன் நோய் தொற்று குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, உதவி கலெக்டர் கோட்டைகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story