தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 215 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
தர்மபுரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்ட 215 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதன்படி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரில் 215 பேருக்கு கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். விடுமுறை வழங்கப்பட்ட 215 போலீசாருக்கு நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்த பரிசோதனையை கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் இளங்கோ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் மேற்பார்வையில் அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனையை நடத்தினார்கள்.
மருத்துவ பரிசோதனையில் உடல்நல பாதிப்புகள் எதுவும் இல்லாத போலீசார் பணிக்கு திரும்புகிறார்கள். இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக 215 போலீசாருக்கு இன்று (புதன்கிழமை) முதல் 7 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story