சாகசத்துக்கும் வழியில்லை... சாப்பாட்டுக்கும் வழியில்லை... ஊரடங்கு உத்தரவால், தவிக்கும் சர்க்கஸ் தொழிலாளர்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக சாகசத்துக்கும் வழியில்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் சர்க்கஸ் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை தகரவெளி கிராமத்தில் உள்ள புற்றடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவையொட்டி சர்க்கஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும். கோவிலை சுற்றி ராட்டினங்கள், தரைக்கடைகள் அமைக்கப்படும்.
இந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம்(மார்ச்) 15-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்காக கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியை சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி ரத்தினம்-அமுதா தம்பதியர் உள்ளிட்ட சர்க்கஸ் தொழிலாளர்கள் 24 பேர், உபகரணங்கள் மற்றும் ஆடு, மாடு, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுடன் கடந்த மாதம் 15-ந் தேதி பொன்னிறை தகரவெளி கிராமத்துக்கு வந்து கோவில் அருகே கூடாரம் அமைத்து தங்கினர்.
கொரோனா அச்சம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் கூடுவது தடை செய்யப்பட்டதால் மார்ச் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் பொன்னிறை தகரவெளி புற்றடி மாரியம்மன் கோவிலில் நடைபெற இருந்த முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சர்க்கஸ் தொழிலாளர்களால் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் போனது.
அதேநேரத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் சர்க்கஸ் தொழிலாளர்களால் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியவில்லை. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த 14 நாட்களாக இவர்கள் உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
சர்க்கசில் சாகசம் காட்டுவதற்கும் வழியில்லாமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் போனதால் மிகவும் மனவேதனையுடன் உள்ள இவர்கள், அரசு தங்களுக்கு உதவுமா? என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சர்க்கஸ் தொழிலாளர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால் சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். சர்க்கசில் சாகசம் செய்யும் நாங்கள், தற்போது எங்களுடன் அழைத்து வந்த விலங்குகளுக்கு கூட உணவளிக்க முடியாத நிலையில் உள்ளோம். எங்களின் குழந்தைகளும் பசியில் வாடுகின்றனர்.
கிராம மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அரிசி, பருப்பு, காய்கறி போன்ற உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். சிறு, சிறு உதவிகளையும் கிராம மக்கள் செய்து வருகிறார்கள். மிகுந்த வேதனையுடனே நாட்களை நகர்த்தி வருகிறோம். எனவே எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன், சர்க்கஸ் உபகரணங்களை சொந்த ஊருக்கு ஏற்றிச்செல்ல 2 லாரிகளை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.
Related Tags :
Next Story