வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி நுழைவுவாயில் காய்கறி வாங்க வருபவர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடு


வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி நுழைவுவாயில் காய்கறி வாங்க வருபவர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 8 April 2020 2:54 PM IST (Updated: 8 April 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

வடசேரி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி வாங்க வருபவர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வந்த கனகமூலம் சந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வடசேரி பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த சந்தையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இருசக்கர வாகன நெரிசலும் அளவுக்கதிகமாக இருந்து வருகிறது.

சந்தைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கை கழுவ சோப்புத்திரவம் மற்றும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சந்தைக்குள் பொதுமக்கள் வரும்போதே அவர்களை முழுமையாக சுத்தப்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

அதாவது சந்தைக்குள் மக்கள் நுழையும் பகுதியான பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் கிருமி நாசினி நாலாபுறமும் தெளிக்கும் தானியங்கி எந்திரங்கள் பொருத்தப்பட்ட நுழைவு வாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி நீளமுள்ள இந்த நுழைவு வாயிலில் சந்தைக்கு வரும் பொதுமக்கள் 3 அடி இடைவெளிவிட்டு செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் இந்த நுழைவு வாயில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. நேற்று காலையில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. சந்தைக்கு வந்தவர்கள் அனைவரும் இந்த வாயில் வழியாக பொருட்கள் வாங்க சென்றனர். ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் நனையும் அளவுக்கு கிருமி நாசினி கொட்டப்படவில்லை. பனித்துகள்கள் உடல்மீது விழுவதுபோன்ற உணர்வுதான் தென்பட்டது. சிலர் ஆடைகள் மீது கிருமிகள் தொற்றியிருந்தாலும் இந்த வாயிலில் தெளிக்கப்படும் மருந்தால் அவை அழிக்கப்பட்டுவிடும் என்றனர் அதிகாரிகள்.

மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்ட வாயில் வழியாக வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வடசேரி போலீசாரும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களும் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களை சுரங்க வாயில் வழியாக வருமாறு அறிவுறுத்தினர்.

பஸ் நிலையத்துக்கு காய்கறி வாங்க வருபவர்களை கொரோனா தாக்காமல் இருக்க பாதுகாப்புக்கு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தை செயல்படும் நேரத்தில் மட்டும் இந்த கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்ட சுரங்க வாயில் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story