வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பேட்டி
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்தார்.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
33 பேருக்கு 40 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அதில் 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் 2 பேரும் இருந்த பகுதியான நன்னகரம் மற்றும் புளியங்குடி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை மூலம் சர்வே செய்யப்பட்டு கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு இந்த பரிசோதனை நடைபெற்றது. 400 பேர் கொண்ட குழு இதனை பரிசோதனை செய்தனர்.
அதிகாரிகள் வீடுகளுக்கு வரும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண் டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதிகமான சர்க்கரை வியாதி மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்கிறோம். மற்றபடி நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்துகிறோம். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். இதில் எவ்வித பயமும் கூடாது. ஏனென்றால் நோய்த்தொற்றை முதலிலேயே கண்டுபிடித்து விட்டால் அதனை சரி சய்து விடலாம். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
450 படுக்கைகள் தயார்
வெளியூர்களுக்கு திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர பணிகளுக்காக செல்பவர்களுக்கு இ பாஸ் மூலம் அனுமதி அளித்து வருகிறோம். இதன்படி 424 பேருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மகப்பேறு சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொண்ட 124 பேருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவிற்காக 200 படுக்கைகள் தயாராக உள்ளன. சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளை சேர்த்து மொத்தம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 450 படுக்கைகள் உள்ளன. ஹைட்ராஸிக் குளோயிங் மாத்திரைகளை டாக்டர்களின் அனுமதி இல்லாமல் கடைகளில் வாங்க கூடாது. அவ்வாறு கடைகளில் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாத்திரைகள் பக்க விளைவுகள் உள்ளவை. டாக்டர்கள் அனுமதி இல்லாமல் சாப்பிடுவது ஆபத்தாகும். மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு அதன் முடிவுகள் ஒன்றிரண்டு நாட்களில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமச்சந்திர பிரபு உடனிருந்தார்.
Related Tags :
Next Story