கிராமங்களில் காட்சிகள் மாறின புத்துயிர் பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள்


கிராமங்களில் காட்சிகள் மாறின புத்துயிர் பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள்
x
தினத்தந்தி 9 April 2020 3:15 AM IST (Updated: 9 April 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கினால் பெரியவர் முதல் சிறியவர் வரை வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட தொடங்கியுள்ளனர்.

தாயில்பட்டி, 

உழைத்து முடித்து விட்ட முதியவர் முதல் வீதிகளில் ஓடி ஆடிய சிறுவர்-சிறுமியர் வரை அனைவரும் ஊரடங்கினால் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். 10 நாட்களை கடந்து விட்ட நிலையில் பொழுதுபோக்கு சாதனங்கள் போர் அடிக்க தொடங்கி விட்டன. செல்போன் பார்த்து பார்த்து அதுவும் புளித்துப்போய் விட்டது.

இந்த சூழ்நிலையில் கிராமப்பகுதிகளில் நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மவுசு பிறந்து விட்டது. அனைவரது வீடுகளிலும் பெண்கள் தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் போன்றவற்றை விளையாடுகின்றனர். பல்லாங்குழி பலகைகள் எல்லாம் பரணி ஏறி ஓய்வு எடுத்து வந்த நிலையில் அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இளம்தலைமுறையினருக்கு அதனை விளையாட தெரியாத நிலையில் பாட்டிமார்களும் அக்கம்பக்கத்தில் உள்ள முதியவர்களும் கற்றுக்கொடுத்துள்ளனர். வித்தியாசமான அனுபவமாக அதனை விளையாடி மகிழ்கின்றனர்.

வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் பெண்கள் மரத்தடியில் அமர்ந்து நீண்ட காலத்துக்கு பிறகு ஊர்கதை பேசியபடியே தாயம் விளையாடுவதையும் காண முடிகிறது.

மேலும், வெளியில் இருந்து தின்பண்டங்கள் கிடைக்காத நிலையில் பெண்கள் வித விதமாக பலகாரங்கள் செய்ய தொடங்கியுள்ளார்கள். இளம்பெண்களும் சமையல் கற்றுக்கொள்ள இந்த ஊரடங்கு துணை நின்றுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் ரேஷன்கடைகளுக்கு பெண்களே சென்று வந்தனர். இப்போது ஆண்களை காண முடிகிறது.

சிறுவர்களும் இளைஞர்களும் கேரம், சதுரங்கம், இறகு பந்து போன்றவற்றின் பக்கம் திரும்பியுள்ளனர். ஒரு சிலர் மறைவான பகுதியில் பதுங்கி பணம் வைக்காமல் சூதாடி பொழுது போக்குகின்றனர்.

மேலும் வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக போனஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது உற்பத்தி முடங்கி விட்டதால் போனஸ் வர வாய்ப்பு இல்லை என்று கருதிய நிலையில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக பட்டாசு ஆலை அதிபர்கள், தொழிலாளர்களின் வங்கி கணக்கு மூலமாக சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை போனஸ் வரவு வைத்துள்ளனர். அத்தோடு அரசின் நிவாரணமாக ரூ.1000 கிடைத்திருப்பது அனைவருக்கும் புதிய தெம்பை தந்துள்ளது.

இந்த நிலையில் தாயில்பட்டி கடைவீதியில் நேற்று சமூக இடைவெளிஇல்லாமல் கடைகளில் கூட்டம் இருந்தது. நேற்று பிற்பகலில் ரோந்து வந்த போலீசார் அனைவரையும் எச்சரிக்கை செய்தனர். மேலும் சிலரது இரு சக்கர வாகனங்களில் சாவியை பறித்துச்சென்று விட்டனர். மாலைவரை அதனை வழங்காமல் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை கூறி சாவியை திரும்ப கொடுத்தார்கள்.

மேலும் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களையும் கண்டித்து அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று கூறி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று வெம்பக்கோட்டை போலீசாரால் 15 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம் பகுதியில் ஊராட்சி மூலம் தீயணைப்பு வாகனம் மற்றும் தனியார் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் நிதி நிலை தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்க ஒத்துழைக்கவில்லை. இதனால் இந்த கிராமத்தினரே மஞ்சள், வேப்பிலை பொடி கலந்த தண்ணீரை தெருவெங்கும் தெளிக்கின்றனர். காலையில் வீடுகளின் முன்பு விளக்கேற்றி வைக்கவும் தவறுவதில்லை. வேப்பிலை தோரணமும் கட்டியுள்ளனர்.

தாயில்பட்டியில் பல இடங்களில் தெருக்களில் இளைஞர்கள் விழிப்புணர்வூட்டும் வகையில் கோலம் வரைகின்றனர். மேலும் துரைசாமியாபுரம் கிராமத்துக்குள் வெளியில் இருந்து ஆட்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Next Story