கர்நாடகத்தில் கொரோனாவை ஒழிக்கும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனாவை ஒழிக்கும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மல்லேசுவரத்தில் துப்புரவு மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கலந்துகொண்டு, அந்த தொழிலாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த கொரோனாவை முழுவதுமாக ஒழிக்கும் வரை அதாவது 7, 8 மாதங்கள் மக்கள் இதே போல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முக கவசங்களை அணிய வேண்டும்.
கொரோனாவின் தாக்கம் குறித்து ஆராய்ந்த பிறகு மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவது குறித்து முடிவு எடுக்கும். இந்த சமுதாயத்தின் நலன் கருதி அரசு எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மல்லேசுவரம் பகுதியில் தினமும் 12 ஆயிரம் உணவு பொட்டலங்கள் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
உணவு தயாரிக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த மல்லேசுவரம் பகுதியில் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் அட்டையை வைத்திருப்போருக்கு மாதம் 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story