வியாபாரம் செய்ய முடியாததால் தள்ளுவண்டி வியாபாரிகள் வருமானமின்றி தவிப்பு
வியாபாரம் செய்ய முடியாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் தள்ளுவண்டி வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் பலர் தள்ளுவண்டிகளில் பழங்கள், கூழ் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து விற்பனை செய்து வந்தனர். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அந்த நேரத்தில் மட்டும் கடைகள் திறக்கப்படுகின்றன. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் தள்ளுவண்டிகளில் பழ வகைகள், கூழ், உணவு வகைகள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, அவர்கள் வருமானமின்றியும் தவித்து வருகின்றனர். அவர்களுடைய தள்ளுவண்டிகள் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலைய சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தள்ளுவண்டியில் பழ வகைகள், கூழ், உணவு வகைகள் உள்ளிட்டவை வைத்து விற்பனை செய்து வந்தனர். அதன்மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.300 வரையிலும் கிடைக்கும். அதனை வைத்து நாங்கள், எங்கள் குடும்பத்தை நடத்தி வந்தோம். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி வீட்டிலேயே வியாபாரிகள் முடங்கி கிடக்கிறோம். மேலும் விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த பழ வகைகள் எல்லாமே அழுகிவிட்டன. வியாபாரம் நடத்துவதற்கு வாங்கிய கடனை எப்படி திரும்ப செலுத்த போகிறோம் என்பது தெரியவில்லை.
தற்போது வருமானம் ஏதும் இல்லாததால் போதிய அளவு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறோம். எனவே தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் வியாபாரம் செய்ய அரசு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை ரூ.1,000 கிடைத்தது. மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு அரசு அறிவித்த ரூ.1,000 பெறுவதற்கு வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிவாரண தொகைகள் குடும்பம் நடத்த போதாது. எங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க அரசு வழங்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story