மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x

புதுச்சேரி மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் பொதுமக்கள் ரூ.5 கோடி அளித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர்கள், முக கவசம், பாதுகாப்பு உடைகள் வாங்க வேண்டி உள்ளது. மத்திய அரசு நமக்கு இதுவரை நிதி வழங்கவில்லை.

இதனால் கூடுதல் நிதி கிடைத்தால் நமக்கு அது பயனளிக்கும். மாநில அரசின் நிதியில் இருந்து தான் இதுவரை நிவாரணங்களை வழங்கி உள்ளோம். தொடர்ந்து உதவிட தொழிலதிபர்கள், பணக்காரர்கள் அதிகப்படியான நிதி தர வேண்டும். மாணவி ஒருவர் ரூ.3,500, மாணவர் ஒருவர் ரூ.2 ஆயிரம் வழங்கியுள்ளனர். அதை கண்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

இது சோதனையான காலகட்டம். இப்போது மக்களை பாதிப்பின்றி காப்பாற்ற வேண்டும். சிறு, குறு தொழில்கள் சுய தொழில்கள் இல்லாததால் புதுவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இலவச அரிசி, பருப்பு வழங்க உள்ளோம்.

மேலும் மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உதவிட ஆயத்த வேலைகளை செய்து வருகிறோம். துரதிஷ்டவசமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மதுபானம், பத்திரப்பதிவு, வணிக நிறுவனங்கள் மூலம் அரசுக்கு வருமானம் எதுவும் வரவில்லை. இருந்தபோதிலும் முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்கியுள்ளோம்.

பிரதமர் மோடி பிற மாநிலங்களுக்கு நிதி வழங்கி உள்ளார். ஆனால் நாம் பலமுறை கேட்டும் இதுவரை நிதி வழங்கவில்லை. ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி உள்ளேன். மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதனை கருத்தில் கொண்டு நாங்கள் செயல்படுவோம்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல்-அமைச்சர்களின் கருத்துக்களை பிரதமர் கேட்கிறார். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், மக்களுக்கு துன்பம் ஏற்படாமலும் இருக்க நாம் அப்போது நடவடிக்கை எடுப்போம்.

இந்த காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் 95 சதவீத மக்கள் தற்போது வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை. ஆனால் 5 சதவீதம் பேர் தேவையில்லாமல் வெளியில் சுற்றுகின்றனர். அவர்களும் முழுமையாக தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது நடவடிக்கையின் காரணமாக தான் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story