சங்குத்துறையில் கடல் சீற்றம்; ராட்சத அலையில் படித்துறை இடிந்தது


சங்குத்துறையில் கடல் சீற்றம்; ராட்சத அலையில் படித்துறை இடிந்தது
x
தினத்தந்தி 9 April 2020 5:08 PM IST (Updated: 9 April 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே சங்குத்துறையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. அப்போது ஏற்பட்ட ராட்சத அலையால் படித்துறை இடிந்து விழுந்தது.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது சங்குத்துறை கடற்கரை ஆகும். குமரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து கடல் அழகை ரசித்து விட்டு செல்வது வழக்கம்.

மேலும் நாகர்கோவிலில் வசிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சங்குத்துறை கடற்கரைக்கு குடும்பத்துடன் படையெடுத்து சென்று, விளையாடி மகிழ்வது வழக்கம்.

அந்த அளவு அனைவரையும் கவர்ந்த சங்குத்துறையில், கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. நேற்று ராட்சத அலைகள் எழுந்து வந்தன. அவை கடற்கரையில் இருந்த மண்ணை அரித்து சென்றன.

அங்கு சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் தாண்டி சாலை வரை தண்ணீர் சென்றது. இதனால் இருக்கைகளின் அருகே இருந்த மணல் அரித்து செல்லப்பட்டு, அவை பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அங்கிருந்த மரங்களும் சாய்ந்தன.

மேலும் அங்குள்ள படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை இடிந்து விழுந்தன. மேலும் ராட்சத அலையால் சாலை அரித்து செல்லும் நிலை உள்ளது. தகவல் அறிந்ததும், ஆஸ்டின் எம்.எல்.ஏ. விரைந்து வந்து கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.

அப்போது பள்ளம்துறை பங்குத்தந்தை சூசை ஆன்டனி, பள்ளம்துறை பஞ்சாயத்து தலைவர் ஆன்டனி ஆகியோர் வந்து, ராட்சத அலையால் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தார். அதில், ‘சங்குத்துறை பகுதியில் கடல் சீற்றம், ராட்சத ஆலையில் படித்துறை இடிந்து விழுந்தது. மேலும் அங்கு சாலை துண்டிக்கப்படுவதை தடுக்க கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டு இருந்தார். 

Next Story