2 பேருக்கு கொரோனா தொற்று: தாரமங்கலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன - பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாற்று ஏற்பாடு
தாரமங்கலத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நேற்று முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாரமங்கலம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தமிழகம் திரும்பியவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தார்.
இதையடுத்து அவரும், அவரது சகோதரரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் டெல்லி சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த 2-ந் தேதி முதல் சேலம் அரசு ஆஸ்பத்திரி தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவரது சகோதரருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 5-ந் தேதி முதல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே தாரமங்கலம் சந்தைபேட்டையில் நடந்த வந்த காய்கறி மார்க்கெட் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் மாற்றப்படுகிறது. அதே போல தாரமங்கலத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தாரமங்கலத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும் பொதுமக்கள் அதிகமானவர்கள் வெளியே சுற்றித்திரிகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தாரமங்கலத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று (நேற்று) முதல் மூடப்பட்டன. மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மீன்கடைகள் போன்றவை மற்ற ஊர்களில் செயல்படுவது போன்று இங்கு செயல்படாது. அதே நேரத்தில் காய்கறி கடைகள் மட்டும் தினமும் காலையில் செங்குந்தர் பள்ளி மைதானத்தில் செயல்படும். இங்கு சமூக இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச்செல்லலாம். மேலும் மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லக்கூடாது. கடைக்காரருக்கு போன் செய்து, தேவையான பொருட்களை தெரிவிக்கலாம். அவர் தான் வீடுகள் தோறும் வினியோகம் செய்ய வேண்டும். இந்த மாற்று ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு ஓவியங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தாரமங்கலம் பகுதியில் இன்று முதல் வீடுகள் தோறும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேரூராட்சி செயல் அலுவலர் குலத்துங்கன் தெரிவித்துள்ளார்.
இதே போல எடப்பாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவர்கள் 3 பேரையும் மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி, தனிமை வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 15, 16, 17 ஆகிய வார்டுகளில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, கவுண்டம்பட்டி சாலை, நடுத்தெரு, பவானிரோடு ஆகிய பகுதிகளுக்குள் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தடுப்பு அமைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story