நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உருக்கம்: கொரோனா வார்டில் பணியாற்றும் கர்ப்பிணி- 59 நர்சுகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் கர்ப்பிணி மற்றும் 59 நர்சுககள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் தங்களது குழந்தைகளை கட்டியணைக்க முடியாமல் தவிக்கும் உருக்கமான சம்பவம் அனைவரது இதயத்தையும் கனக்க செய்கிறது.
நெல்லை,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பறித்து விட்டது. இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது தனித்து இருந்தால் தான் அந்த நோயை வெல்ல முடியும் என்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் வைத்து தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா சிறப்பு வார்டும், தனிமை வார்டும் அமைக்கப்பட்டு உள்ளன.
அங்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த பணியில் நர்சுகள் மட்டும் 60 பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். தங்களது குழந்தைகள், குடும்பத்தினரை மறந்து கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய வேண்டும் என்ற ஒரே உன்னத நோக்கத்தில் இரவும், பகலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 7 மாத கர்ப்பிணி நர்சும் ஒருவர்.
இவர்களில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் போல் தான் உள்ளனர். அதாவது அவர்கள் பாதுகாப்பு கருதி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள வெவ்வேறு அறைகளில் தங்கி இருக்கின்றனர். அங்கிருந்து தங்களது பணி நேரத்தில் மட்டும் நேராக கொரோனா வார்டுக்கு சென்று பணியாற்றுகின்றனர். மற்ற நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறையிலேயே உள்ளனர்.
கட்டி அணைக்க முடியவில்லையே..
இவர்களில் திருமணம் ஆன நர்சுகளும் பலர் உள்ளனர். அவர்களது குழந்தைகள் சில நேரம் தாயை பார்க்க வேண்டும் என்று அழுது அடம்பிடிக்கின்றனர். அவர்களை தந்தை ஆஸ்பத்திரியின் பிரதான நுழைவு வாயில் அருகில் அழைத்து வருகிறார். அப்போது தாய் ஆஸ்பத்திரி உள்ளேயும், குழந்தை வெளியேயும் நின்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கையசைத்து பாசத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அப்போது சில தாய்மார்கள் தங்களது குழந்தையை கட்டி அணைக்க முடியவில்லையே என்று ஏங்கும் உருக்கமான சம்பவம் அனைவரது இதயத்தையும் கனக்க செய்கிறது.
இந்த பாசப்போராட்டம் குறித்து நர்சுகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் யாருக்கும் பரவி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பணிபுரிந்து வருகிறோம். இதனால் வீட்டுக்கு செல்வதை தவிர்த்து விட்டோம். வெளியூர் நர்சுகள் தங்களது வீடுகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் இல்லை. குடும்பத்தை சந்திக்க ஆர்வமாக தான் உள்ளோம். ஆனால் கொரோனாவை விரட்டுவதற்கு குடும்பத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது என்று இருக்கிறோம். எங்கள் குழந்தைகளை கட்டியணைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் உள்ளது“ என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
வணங்க வேண்டும்
நோயாளிகளின் நலனுக்காக தொடர்ந்து வீட்டுக்கு செல்லாமல் பணிபுரியும் நர்சுகளை டாக்டர்கள், சக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த பாராட்டு மட்டும் அவர்களுக்கு போதாது, கையெடுத்து கும்பிட்டு வணங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Related Tags :
Next Story