ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்த வெளிநாட்டுக்காரர் சிக்கினார் - விடுதி உரிமையாளர் மீதும் வழக்கு
ராமேசுவரத்தில் தலைமறைவாக இருந்த வெளிநாட்டுக்காரர் சிக்கி உள்ளார். அவரைப்பற்றி தகவல் கொடுக்காத விடுதி உரிமையாளர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
கொரோனா பரவலை தடுக்க கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடியே கிடக்கின்றன.
இந்தநிலையில் ராமேசுவரத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தடையை மீறி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தங்கி இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி அக்னிதீர்த்த கடற்கரை அருகே உள்ள அந்த தங்கும் விடுதிக்கு தாசில்தார் அப்துல்ஜபார், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மற்றும் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார், சுகாதார துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு விடுதி அறையில் இருந்த வெளிநாட்டுக்காரரை பிடித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜன்டன்சார்லஸ் டேனியல் (வயது 69) என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கொச்சியில் உள்ள விமானம் நிலையத்தில் வந்திறங்கி, அங்கு சுற்றி பார்த்து விட்டு அதன் பின்னர் கன்னியாகுமரி சென்றேன். 17-ந் தேதி ராமேசுவரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தேன்.
ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சொந்த நாடு செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறேன். சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புவதால் சென்னையில் உள்ள துணை தூதரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் வெளிநாட்டு முதியவர் தலைமறைவாக தங்கியிருந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்த தங்கும் விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி ரொட்ரிகோ கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கும் விடுதி உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங்க் மீது நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்தபின் ஜன்டன்சார்லஸ் டேனியல் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story