ஊரடங்கிலும் விவசாய பணிகள் மும்முரம்; வெங்காய நாற்று நடவு செய்த பெண்கள்


ஊரடங்கிலும் விவசாய பணிகள் மும்முரம்; வெங்காய நாற்று நடவு செய்த பெண்கள்
x
தினத்தந்தி 10 April 2020 4:00 AM IST (Updated: 10 April 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் பகுதியில் ஊரடங்கிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வெங்காய நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.

போடிப்பட்டி,

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்களின் முக்கிய தேவையாக உணவு மட்டுமே உள்ளது.இதனால் உணவு உற்பத்திக்காக உழைக்கும் விவசாயிகளே உலகமெங்கும் தவிர்க்க முடியாத சக்தி என்பதை அனைவரும் உணர்வதற்கான வாய்ப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஊரடங்கு காரணமாக காய்கறிகளின் தேவையும் அதிகரித்து உள்ளது.

உடுமலை,குடிமங்கலம் பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஆனால் கொரோனா குறித்த அச்சத்தால் கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் விவசாயப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு பல விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயப்பணிகள் முற்றிலுமாய் முடங்கினால் வரும் காலங்களில் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பல இடங்களில் விவசாயப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.குறிப்பாக குடிமங்கலம் பகுதியில் விவசாயப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் வெங்காய நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெண் தொழிலாளர்கள் வயலில் இறங்கி சின்ன வெங்காயத்தை நடவு செய்தனர். இது குறித்து சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

‘பொதுவாக விளைபொருட்கள் விலை ஏற்ற இறக்கங்கள் தான் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.ஆனால் தற்போது கொரோனா அச்சம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. பல இடங்களில் புதிதாக விவசாயப்பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது.அத்துடன் தற்போது அறுவடை செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்கள் உள்ளன.அதுமட்டுமல்லாமல் போதிய விலை கிடைக்காத நிலையும் இருக்கிறது.இதனால் வரும் மாதங்களில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வரத்து குறைந்து விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

ஆனால் கொளுத்தும் வெயிலில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு உபகரணங்கள் அணிந்து வேலை செய்வதில் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு தயக்கம் உள்ளது. ஆனாலும் சளி,இருமல்,காய்ச்சல் போன்றவை இருக்கும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில்லை. பாதுகாப்பான முறையில் பணியாற்ற தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். சின்ன வெங்காய சாகுபடியைப் பொறுத்தவரை எல்லா பருவத்துக்கும், எல்லா மண் வகைக்கும் ஏற்ற பயிராகவே உள்ளது. 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் சின்ன வெங்காயத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் கூடுதல் நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடிகிறது.

இதனால் ஊட்டத்துக்கு வாமிர்தம், மீன்அமிலம், பஞ்சகவ்யா, கடலைப்பிண்ணாக்கு போன்றவற்றை பயன்படுத்துகிறோம். பூச்சி தாக்குதலிலிருந்து காக்க இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் கரைசலை பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story