ராமநாதபுரத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


ராமநாதபுரத்தில் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 April 2020 5:00 AM IST (Updated: 10 April 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 4,777 பேரில் 1,488 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளனர். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 15 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேருக்கு நோய் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. மீதம் உள்ள 4 பேரின் முடிவுகள் எதிர்பார்த்துள்ளோம். நோய் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டவர்களும் 14 நாட்கள் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை ஊரடங்கு உத்தரவு சமயத்தை பயன்படுத்தி பதுக்கி வைத்திருப்பதோ, கூடுதல்விலைக்கு விற்பனை செய்வதோ இல்லாமல் தடுப்பதற்காக அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 85 மொத்த விற்பனையாளர்களும், 4,856 சில்லரை விற்பனையாளர்களும் உள்ளனர். இவர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த விற்பனையாளர்களுக்கும் பொருட்கள் கொள்முதல் செய்து கொண்டுவருவதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவினை பயன்படுத்தி யாராவது பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story