வீட்டில் இருந்து வெளியேவர வழங்கப்பட்ட அனுமதி அட்டை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? கலெக்டர் கந்தசாமி ஆய்வு


வீட்டில் இருந்து வெளியேவர வழங்கப்பட்ட அனுமதி அட்டை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? கலெக்டர் கந்தசாமி ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2020 3:45 AM IST (Updated: 10 April 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை 6 மணியில் இருந்து பகல் 1 மணி வரை மட்டுமே மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை பயன்படுத்தி பலர் தேவையின்றி மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் சுற்றி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மூலம் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பொதுமக்களுக்கு அனுமதி அட்டை வழங்கி உள்ளது. இந்த அட்டையை பயன்படுத்தி அதில் குறிப்பிட்டுள்ள நாட்களில் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டை முறையாக பயன்படுத்தபடுகிறதா என்று திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா அருகில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் வந்த நபர்களிடம் அனுமதி அட்டை வைத்து உள்ளர்களா? என்று கேட்டு அனுமதி அட்டை வைத்திருந்தவர்களை கடைகளுக்கு செல்ல அனுமதித்தார். அனுமதி அட்டை இல்லாமல் வெளியே வந்தவர்களை எச்சரிக்கை விடுத்தும், அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

முன்னதாக திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கிருமி நாசினி பாதையை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு தொழில் ரீதியாக போளூர் மற்றும் ராணிப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த 2 குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊருக்கு காரில் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு காய்கறி, ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் 9 பேரும் ஆரோக்கியமாக உள்ளனர். ஆபத்தான நிலையில் யாரும் இல்லை. இவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 38 பேரின் ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. முடிவுகள் விரைவில் தெரியவரும்.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த 7 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக கொண்டு வரப்பட்டு அங்கு வசிக்கும் 30 ஆயிரம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை பரிசோதிப்பதற்காக தமிழக அரசு வழங்கியுள்ள விரைவாக சோதனை செய்யும் ராப்பிட் கருவி இன்று (வெள்ளிக்கிழமை) கிடைக்கிறது. இதன் மூலம் களத்தில் சென்று சோதனை செய்தால் உடனுக்குடன் முடிவுகள் தெரியவரும். இந்த சோதனை அடிப்படையில் உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க மாவட்டம் முழுவதும் 500 படுக்கை வசதிகளுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story