பெரம்பலூரில், கோழி இறைச்சி விலை எகிறியது - கிலோ ரூ.160-க்கு விற்பனை
பெரம்பலூரில் கோழி இறைச்சி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.
பெரம்பலூர்,
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கோழி இறைச்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் கடந்த மாதம் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கறிக்கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தகவல் பரவியது. இதன்காரணமாக பலர் கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்தனர்.
விற்பனை குறைந்ததால் கறிக்கோழி விலை சரியத்தொடங்கியது. பெரம்பலூரில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி இறைச்சி ரூ.40-க்கு விற்பனையானது. மேலும் சில இடங்களில் கோழிகளை இலவசமாக கொடுத்தாலும் பொதுமக்கள் வாங்க முன்வரவில்லை. கோழி இறைச்சி விலை வீழ்ச்சியடைந்ததால் கறிக்கோழிகள் வளர்க்கப்படாத நிலையில் பண்ணைகள் மூடப்பட்டன. மேலும் கோழி முட்டையின் விலையும் வீழ்ச்சியடைந்து ஒரு முட்டை ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கோழி இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவவில்லை என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் கோழி இறைச்சி வாங்க மீண்டும் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால், அதன் விலை உயர தொடங்கியது. மேலும் கோழி இறைச்சி வாங்க கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சி கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெரம்பலூரில் கடந்த மாதம் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி, தற்போது 4 மடங்கு உயர்ந்து நேற்று ரூ.160-க்கு விற்பனையானது. இதனால் அந்த கடைக்கு வந்த அசைவ பிரியர்கள்அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் அவர்கள் கோழி இறைச்சியை வாங்கி சென்றனர். அந்த கடையில் வேலை பார்ப்பவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். மேலும் ரூ.2-க்கு விற்ற கோழி முட்டை தற்போது ரூ.4-க்கு விற்பனையானது.
இது குறித்து கோழி இறைச்சி கடைக்காரர்கள் கூறுகையில், கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரப்பியதால் விலை வீழ்ச்சி யடைந்ததோடு, கோழிப்பண்ணைகளும் மூடப்பட்டன. இதனால் கோழிகள் வளர்க்கப்படாததால், அதன் வரத்து குறைய தொடங்கியுள்ளது. கோழிகள் மூலம் கொரோனா பரவாது என்று அரசு கூறியதால், பொதுமக்கள் கோழி இறைச்சியை மீண்டும் சாப்பிட தொடங்கியுள்ளனர். இதனால் கோழி இறைச்சியின் விலை உயர்ந்துள்ளது. தற்போது மீண்டும் கோழிப்பண்ணைகள் செயல்பட தொடங்கியுள்ளது. அங்கிருந்து கோழி விற்பனைக்கு வர ஒரு மாதம் ஆகும் என்பதால், அதுவரை கோழி இறைச்சி விலை உயர்ந்து கிட்டே தான் போகும், என்றனர்.
Related Tags :
Next Story