மகளை பார்க்க அமெரிக்கா சென்று திரும்பிய நாகை டாக்டருக்கு கொரோனா - திருவாரூரில் மேலும் ஒருவர் பாதிப்பு


மகளை பார்க்க அமெரிக்கா சென்று திரும்பிய நாகை டாக்டருக்கு கொரோனா - திருவாரூரில் மேலும் ஒருவர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 April 2020 5:00 AM IST (Updated: 10 April 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

மகளை பார்க்க அமெரிக்கா சென்று திரும்பிய நாகை டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் 3,286 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி வரை நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இவர்கள் நாகை, நாகூர், பொரவச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

நாகையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளி ஆட்கள் வருவதற்கும், அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகையில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர் 15 நாட்களுக்கு முன்பு நாகை திரும்பி உள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

டாக்டர் பணியாற்றிய கிளினிக்கில் நேற்று இரவு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. நாகையில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரோன் மூலமாக கண்காணித்து வருகிறார்கள். அதேபோல் துப்புரவு பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 1,433 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதி சிறப்பு கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3-ந் தேதி வரை மாவட்டத்தில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் நடந்த பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Next Story