கீரமங்கலம் பகுதியில் பூத்து குலுங்கும் சென்டி பூக்கள்: அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை
கீரமங்கலம் பகுதியில் தோட்டங்களில் பூத்து குலுங்கும் சென்டி பூக்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் சென்டி பூக்கள் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பூ கமிஷன் கடைகள் மூலம் பல மாவட்ட வியாபாரிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பூக்கள் அறுவடை செய்யப்படாமல் செடிகளிலேயே பூத்து குலுங்கி வருகிறது. இதனால் செலவு செய்து பூச் செடிகள் வளர்த்த விவசாயிகள் அதிக நஷ்டமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தோட்டங்களில் தேங்கியுள்ள பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் கூறுகையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரே நாளைக்கு சுமார் 5 டன் வரை சென்டி பூக்கள் அறுவடை செய்யப்பட்டு கமிஷன் கடைகள் மூலம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பூக்கள் மாலைகள் கட்டுவதற்காகவும், கதம்பம் கட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக சென்டிப்பூ மாலைகள் கோவில்களில் பயன்படுத்த தடை செய்யப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு துக்க நிகழ்ச்சிகளுக்கு மாலைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஊரடங்கால் துக்க நிகழ்ச்சிகளிலும் மாலைகள் போட வழியில்லை. இதனால் சுமார் 100 டன் சென்டி பூக்கள் தோட்டங்களிலேயே தேங்கி வீணாகி வருகிறது. ஒவ்வொரு செடிக்கும் தலா 30 ரூபாய் வரை செலவு செய்து நஷ்டப்பட்டு வருகிறோம். அதனால் தமிழக அரசு சென்டிப் பூ விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினால் தான் விவசாயிகள் மீளமுடியும் என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் காய்கறிகள் விற்பனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதே போல பூக்கள் விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story