தேனி மாவட்டத்தில், மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தேனி,
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் உள்பட தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் இறந்தார். மீதமுள்ள 22 பேருக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடி சென்று பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் போடியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால், தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 16 பேருக்கு, நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு ஆய்வு செய்ததில், 20 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் மகள் ஆவார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தேனி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் பகுதிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் 13 பேர், கம்பத்தில் 3 பேர், சின்னமனூரில் 6 பேர் என 30 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தேனியில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 7 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர். மற்றொருவர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆவார். இவர்களில் யாருக்காவது கொரோனா உள்ளதா? என்பது பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story