முத்தூர் அருகே முட்களை வெட்டி சாலையை அடைத்த கிராம மக்கள்


முத்தூர் அருகே முட்களை வெட்டி சாலையை அடைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 11 April 2020 3:00 AM IST (Updated: 11 April 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே போலீஸ் கண்காணிப்பை மீறி வாகனங்கள் வருவதை கண்டித்து நொய்யல் ஆற்று தரைப்பாலத்தில் முட்களை வெட்டிபோட்டு கிராம மக்கள் சாலையை அடைத்தனர்.

முத்தூர்,

கொரோனா வைரஸ் பரவுதல் தாக்கத்தை கட்டப்படுத்த மத்திய,மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ளன. திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட எல்லைகளை இணைக்கும் மு.வேலாயுதம்பாளையம் நொய்யல் ஆற்று முன்புற பகுதி, சாலியங்காட்டுப்பள்ளம் பஸ் நிறுத்த பகுதி ஆகிய 2 இடங்களில் வெள்ளகோவில் போலீசார் சோதனை சாவடி அமைத்து நகரும் தடுப்பு கம்பிகளை வைத்து அடைத்து உள்ளனர். மேலும் இந்த 2 சோதனை சாவடிகளில் 3 பிரிவுகளாக தலா 2 போலீசார் வீதம் மொத்தம் 6 போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சோதனை செய்து கண்காணித்து அனுப்பி வருகின்றனர். இந்த சோதனையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

இதற்கிடையே மு.வேலாயுதம்பாளையம் நொய்யல் ஆற்று பாலத்தின் பிரதான சாலையின் அருகில் பழைய தாழ்வான தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பகல், இரவு நேரங்களில் நொய்யல் ஆற்றின் மறுபுறம் ஈரோடு மாவட்ட எல்லையை அடைத்து சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிவகிரி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு பல்வேறு கனரக, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பழைய தாழ்வான நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை கடந்து திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தன.

இதனால் மு.வேலாயுதம்பாளையம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை 10 மணிக்கு ஒன்று சேர்ந்து நொய்யல் ஆற்று தரைப்பாலத்திற்கு சென்று சீமை கருவேல மரங்களை வெட்டி முட்புதர்களாக மாற்றி சாலையின் நடுவில் போட்டு அடைத்தனர்.

மேலும் இந்த நொய்யல் ஆற்று பாலத்தின் இருபுறமும் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் கூடுதல் போலீசாரை நியமித்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story