காங்கேயம், முத்தூர் பகுதிகளில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


காங்கேயம், முத்தூர் பகுதிகளில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 April 2020 10:30 PM GMT (Updated: 10 April 2020 7:58 PM GMT)

காங்கேயம், முத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காங்கேயம்,

காங்கேயம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.இதை தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனாலும் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்தது.இரவு 7 மணியளவில் லேசாக மழை தூறல் தொடங்கியது.அதன் பின்னர் இரவு 10 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது.சுமார் ஒரு மணிநேரம் காங்கேயம் நகரப்பகுதி மட்டுமல்லாமல் கிராமப்பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது.அதன்பின்னர் அதிகாலை நேரத்திலும் அவ்வப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

இந்த மழை காரணமாக பூமி வெப்பம் தணிந்து குளிர்ந்தது. மேலும் சாலைகளில் மழை நீர் ஓடியது. காங்கேயம் போலீஸ் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா பகுதியிலும்,காங்கேயம் சென்னிமலை ரோட்டில் உள்ள சகாயபுரம் என்ற இடத்திலும் சாலையோரத்தில் மழை நீர் தேங்கி குளம் போல காணப்பட்டது. ஆனாலும் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது.அவ்வப்போது வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த மழை காரணமாக காங்கேயம் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சில கிராமப்பகுதிகளிலும் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இந்த மின் தடை காரணமாக மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக ஆலாம்பாடி ஊராட்சி உள்ளிட்ட சில கிராமப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தடைபட்ட மின்சாரம் நேற்று மாலை 4 மணிக்கு தான் மீண்டும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மின் தடை காரணமாக சிரமத்திற்கு ஆளாகினர்.

முத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல்் நகர பகுதிகளில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனை தொடர்ந்து இரவு 10.15 மணிக்கு மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்தது. இந்த மழையினால் கடைவீதி, பஸ்நிலையம், ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, காங்கேயம் சாலை, கொடுமுடி சாலை, நத்தக்காடையூர் சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. பின்னர் இந்த மிதமான மழை நேற்று அதிகாலை 5 மணி வரை பெய்தது. இதன்படி முத்தூர் நகர பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில்் 4 மில்லி மீட்டர் மழை பெய்து பதிவாகி உள்ளது. ஆனால் கிராமப்பகுதிகளில் குறைவான அளவில் சாரல் மழையே பெய்தது.

Next Story